Friday, December 21, 2012

மோடியின் வெற்றி மதசார்பின்மைக்கு கிடைத்த அடி!

                     குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு எண்ணிக்கை 20.12.2012 காலை தொடங்கியது. இதில் பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஹிந்துத்துவா மோடி மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார். 

மோடி ஆட்சியை பிடித்திருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய அடி என்றே சொல்லலாம். ஹிந்துதுவாவுக்கு எதிரான மத சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், மற்றும் போலி கம்புனிஸ்ட்கள் போன்றோர்களின் உறுதியற்ற அரசியலின் விளைவாக பயங்கரவாதி மோடி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.

குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரத்தை முதல்வராக இருந்து கொண்டு இவரே திட்டமிட்டு நடத்தினார். இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கூட்டம் கூட்டமாக முஸ்லிம் மக்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதனாலேயே அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது. இப்படிபட்ட உலகறிந்த ஹிட்லரை போன்ற பாசிச சிந்தனை கொண்ட ஒருவர் மீண்டும் முதல்வராகி இருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய தோல்வி என்றே சொல்லலாம்.

Monday, December 17, 2012

கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி கவிழ்கிறது!

காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று சொல்லி அக்கட்சியில் இருந்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விலகி தனி கட்சி தொடங்கிறார்.

அதில் இருந்து பாரதிய ஜனதாவின் சரிவு கர்நாடகாவில் தொடங்கியது. ""எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சி, ஸ்ரீராமுலு தொடங்கியுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு பல பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பாஜக அரசை நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கர்நாடகா மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ. க்கள் எடியூரப்பா கட்சிக்கும், 4 எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீராமுலு கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆகக் குறைந்துள்ளது.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன்படி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பசுவதை தடுப்புச் சட்ட மசோதா, 11 தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சௌத்ரிக்கு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (N I A ) தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியாணா மாநிலம் பானிப்பட் அருகே செம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பை சார்ந்த ராஜிந்தர் செளத்ரியை நேற்று சனிக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்படும் 4ஆவது நபர் ராஜிந்தர் செளத்ரி. ஏற்கெனவே அசிமனந்தா, லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ராஜிந்தர் செளத்ரி பற்றித் தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹிந்துத்துவா தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தியது ராஜிந்தர் சௌத்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மத கலவரங்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூல காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  பயங்கரவாத முகம் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

Saturday, December 15, 2012

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

Friday, December 14, 2012

கோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்!

கோத்ரா:குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது.

சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே. 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன. முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு.

Tuesday, December 11, 2012

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்!

காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் சிறிதளவு கூட குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் உள்பட ஐந்து லட்சம் பேர் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய கீதத்தை பாடியும், ஃபலஸ்தீன் கொடியை வீசியும் இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியும் வந்த மக்களை ஹமாஸ் ஸ்தாபக தலைவர் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஜீஸ் ரன்தீஸி ஆகியோர் புன்சிரிக்கும் பிரம்மாண்ட புகைப்படத்தைக் கொண்ட மேடை வரவேற்றது.

ஹமாஸ் கமாண்டர்களின் கடுமையான பாதுகாப்பின் கண்காணிப்பில் மாநாட்டு நகரம் இருந்தது. காலித் மிஷ்அலும், இஸ்மாயீல் ஹானிய்யாவும் மேடைக்கு வந்தபொழுது உச்சபட்ச குரலில் மக்களின் தக்பீர் முழக்கம் வானை எட்டியது.

காலித் மிஷ்அலின் வருகையை யொட்டி காஸ்ஸாவிற்கு வந்த ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டது சிறப்பாகும். ஐக்கிய ஃபலஸ்தீனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று காலித் மிஷ்அல் விடுத்த அழைப்பு ஃபலஸ்தீன் மக்கள் மிகவும் விரும்பிய வார்த்தைகளாகும்.

2006-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக ஹமாஸின் மேடையில் ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒற்றுமையின் செய்தி இங்கிருந்து துவங்குகிறது என காலித் மிஷ்அல் அறிவித்த உடன் மக்கள் பலத்த கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர்.

ஒரே அரசு, ஒரே அதிபர், ஒரே பாராளுமன்றம்!- இதுதான் ஃபலஸ்தீனுக்கு தேவை என்று மிஷ்அல் கூறினார்.

மேலும் அவர் கூறியது: “இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்! பிறந்த மண்ணின் விடுதலைக்கான போராட்டம் மரணம் வரை தொடரும். எங்களின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட நாங்கள் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். புனித போரும், ஆயுத எதிர்ப்பு மட்டுமே எங்களது முன்னால் உள்ள ஒரே வழி. இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைத்து ஃபலஸ்தீனர்களையும் விடுவிப்போம். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உதவிய ஈரானுக்கும், பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்தையும், துருக்கியையும் எங்களுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகத்தையும் பாராட்டுகிறோம்.” இவ்வாறு காலித் மிஷ்அல் கூறினார்.