பா.ஜ.கவில் உள்கட்சி பூசல் வலுத்து
வருகிறது. சஞ்சய் ஜோஷி தேசிய செயற்குழுவில் இருந்து ராஜினாமாச் செய்ததைத்
தொடர்ந்து மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும், சுஷ்மா சுவராஜும் நேற்று
நடந்த பா.ஜ.கவின் பேரணியில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இரண்டு தினங்களாக நடைபெற்ற பா.ஜ.கவின்
தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற பேரணியில் இருவரும்
கலந்துகொள்ளவில்லை. இச்சம்பவம் கட்சிக்கு உள்ளே நடக்கும் கடும் பூசலை
வெளிப்படுத்தியுள்ளது.
பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின்
கட்கரிக்கு பதவியில் தொடர கட்சி சட்டத் திட்டங்களில் திருத்தம் செய்வதற்காக
செயற்குழு கூடியது. கட்கரி மீண்டும் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே
அத்வானியும், சுஷ்மாவும் பேரணியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என
கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்ஸும், குஜராத்தின் மோடியும் பா.ஜ.கவில் தங்களது செல்வாக்கை நிலைநாட்டியதையே இச்சம்பவம் எடுத்தியம்புகிறது.
ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தல்
விவகாரத்தில் அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், யஷ்வந் சின்ஹா ஆகியோர்
கட்கரியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்குப் பின்னர் தேசிய செயற்குழுக் கூட்ட
விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மோடியின் எதிரியான சஞ்சய் ஜோஷிக்கு
மீண்டும் கட்சிப் பொறுப்பு கொடுத்ததால் செயற்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக
மோடி கூறியிருந்தார். வேறுவழியில்லாமல் சஞ்சய் ஜோஷியை ராஜினா செய்ய வைத்து
மோடியை தேசிய செயற்குழுவில் பங்கேற்க வைத்தனர். இதேபோல் கர்நாடக முன்னாள்
முதல்வர் எடியூரப்பாவும் போர்க்கொடி தூக்கியிருந்தார். அவரும் தேசிய
செயற்குழுவைப் புறக்கணிப்பேன் என்று கூறியிருந்தார். பின்னர் மோடியைப்
பின்பற்றி இன்று அவர் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கட்கரிக்கு 2-வது முறையாக
தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் கட்கரியை மீண்டும்
தலைவராக்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்த ஆதிக்கத்தை மூத்த
தலைவரான அத்வானியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்சிக்குள் கோஷ்டி பூசலை
வளர்த்துவிடும் கட்கரிக்கு எப்படி மீண்டும் தலைவர் பதவி தரலாம் என்பது
அத்வானி தரப்பின் கேள்வி. இதைத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும்
வகையில் நேற்று மாலை மும்பையில் நடைபெற்ற பாஜகவின் பேரணியை அத்வானி
புறக்கணித்துவிட்டார்.
இதனிடையே, பா.ஜ.கவில் தலைவர்கள் இடையே
கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனை சீர்செய்யாவிட்டால் மக்கள்
நிராசையடைந்துவிடுவார்கள் என்று அத்வானி கூறுகிறார்.
ஆக மொத்தத்தில் பா.ஜ.க என்பது அதிகாரப்
போட்டி மிகுந்த சுயநல தலைவர்களை கொண்ட கட்சி என்பது தொடர்ந்து நிரூபணமாகி
வருகிறது. இத்தகைய கேடுகெட்ட கட்சியின் எதிர்காலத்தை பிரகாசமாக்க காங்கிரஸ்
தலைமையிலான ஐ.மு அரசின் மக்கள் விரோத ஆட்சி உதவி விடுமோ? என்ற அச்சமும்
நடுநிலையாளர்களிடையே எழுந்துள்ளது.