Wednesday, June 22, 2011

இறையில்லங்கள் தொழுகைக்காக !

இறையில்லங்கள்






ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதற் காக எழுப்பப்பட்ட இறையில்லம் மக்கா நகரிலுள்ள புனித “கஃபா” வாகும். உலகின் இரண்டாவது பள்ளிவாசல் ( இறையில்லம் ) ஜெரூ ஸலத்திலுள்ள புனித “ பைத்துல்முகத்தஸ்” ஆகும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் நாற்பதாண்டுகளாகும்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூதர் அல்கிபாஃரி (ரளி) நூல் :முஸ்லிம் -903

இவைகளுக்குப் பின்புதான் மற்ற பள்ளிவாசல்கள் உலகில் எழுப்பப் பட்டன. இறையருளால் இன்று உலகளாவிய அளவிற்கு இலட்சக் கணக்கான இறையில்லங்கள் உள்ளன. இன்னும் இன்ஷா அல்லாஹ் உலகம் அழியக் கூடிய நாள் வரும் வரையில் இறையில்லங்கள் உருவாகிக்கொண்டே தான் இருக்கும்.

உலகிலுள்ள இறையில்லங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமாகும். யாரும் “அவை தனக்குரியது” என சொந்தம் கொண்டாட முடியாது. மனிதர்களாகிய நாம், நமது இல்லங்களை எந்தளவிற்கு சுத்தமாக, நறுமணமாக வைத்திருப்போமா அதனைவிட கண்ணியமான இடமாக இறையில்லங்களை நாம் வைத்திருக்க வேண்டும். இறை யில்லங்களுக்கு நாம் செய்ய வேண்டிய ஒழுக்கங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.


சுத்தம் அவசியம்

“யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (ஒளு) செய்து விட்டு இறைக்கட்டளை (களான தொழுகை) களில் ஒன்றை நிறைவேற்று வதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ (அவர் எடுத்து வைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறு களில் ஒன்றை அழித்துவிடுகிறது. மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்தி விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) நூல் : முஸ்லிம் 1184

இறையில்லத்திற்கு வரும் சமயம் தனதில்லத்திலேயே ஒளு செய்து விட்டு வரவேண்டும். அப்போதுதான், அவரது ஒரு காலடியின் மூலம் அவரின் (சிறு) தவறுகள் அழிக்கப்படுகிறது. மற்றொரு காலடியின் மூலம் அவரின் தகுதி உயர்த்தப்படுகிறது.

ஆடை சுத்தம்

தொழுகையை நிறைவேற்றுவதற்காக வரும் சமயம் சுத்தமான, அழகான, அலங்காரமான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

“உமது இறைவனை (தொழுகையின் மூலம்) பெருமைப்படுத்துவீராக ! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக !

அல்குர் ஆன் (74 : 3, 4)

சிலர் திருமணம், விழா போன்ற இடங்களுக்கு செல்லும் சமயம் அல்லது அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் சமயம் அழகான, தூய்மை யான, இருப்பதிலேயே நல்ல ஆடைகளை அணிந்து செல்வர். அவ்வாறு அணிந்து சென்றால்தான் அங்கே நுழைவதற்கு அனுமதியும், மரியாதையும் கிடைக்கும்.

ஆனால், அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழக்கூடிய அல்லாஹ்வை சந்தித்து, அவனுடன் உறவாட வரும் சமயம் இருப்ப திலேயே மோசமான அழுக்கான, பழைய ஆடைகளை அணிந்து வருவதை பலரும் வாடிக்கையாக ஆக்கியிருப்பது வேடிக்கையான ஒன்றாகும்.

தொழுகைக்காக வரும் சமயம் அழகான, அலங்காரமான ஆடை களையே அணிந்து வரவேண்டுமென்று அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.

“ஆதமுடைய மக்களே ! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்”

அல்குர் ஆன் ( 7 :31 )

சிலர் தொழுகைக்காக வரும் சமயம் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட (இயற்கை காட்சிகள், கட்டிடங்கள் போன்றவை பதியப் பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்காக வருகின்றனர். “இந்த ஆடைகளை அணிந்து கொண்டு தொழுவது கூடும்” என்றாலும், அணிந்துள்ளவருக்கோ, மற்றவர்களுக்கோ இந்த ஆடைகள் கவனத்தைத் திசை திருப்புமாயின் அந்த ஆடைகளை அணிவதை தவிர்த்து கொள்ளல் வேண்டும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையைப் பற்றி நபி (ஸல்) என்ன கூறுகிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

“கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடையை அணிந்து நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பி விட்டன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்

நூல்: புகாரி 752, 373, 5817


நபி (ஸல்) அவர்களுக்கே கோடு போடப்பட்ட மேலாடை கவனம் திரும்புவதற்கு காரணமாகி விட்டபோது நாம் எம்மாத்திரம்? நமக்கு கவனம் திரும்பாவிட்டாலும் மற்றவர்களுக்கு கவனம் திரும்பாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆகையால் என்னதான் வேலைப் பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை அணியும் பழக்கம் நமக்கிருப்பினும் தொழுகைக்காக செல்லும் சமயம் முடிந்தளவு வெள்ளை நிற ஆடை களையோ அல்லது வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளையோ அணிந்து செல்வது ஒழுக்கமாகும்.


வாயை சுத்தப்படுத்துதல்

துர்வாடையுடைய வெங்காயம், பூண்டு போன்றவைகள் சாப்பிடு வதற்கு ஆகுமாக்கப்பட்டவைகளாகும். ஒரு மனிதர் பசியினாலோ அல்லது மருத்துவத்திற்காகவோ வெங்காயம், பூண்டு போன்றவை களை சாப்பிட்டு அதன் வாடை வாயில் வீசும் காலமெல்லாம் பள்ளி வாசலுக்கு வரவேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். “ஏனெனில் அவ்வாறு அவைகளை சாப்பிட்டு விட்டு தொழுகைக்காக அணியில் (ஸஃப்) நிற்பாராயின் அவருக்கு அருகிலுள்ளவர்களுக்கு இவரது வாயிலிருந்து வெளிவரும் துர்வாடை இடையூறளிக்கும். தங்களது மனதுக்குள் வேதனைப்படுவர். அது மட்டுமன்றி வானவர்களும் இத்துர்வாடையினால் வேதனைப்படுவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


சிலர், தொழுகைக்காக பள்ள்க்கு வரும் சமயம் “இகாமத்” சொல்லும் வரை புகைபிடித்துக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வாயை நல்ல விதமாக சுத்தம் செய்யாமல் அணியில் சேர்ந்து கொள்வர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு தீய பழக்கமாகும். ஏனெனில், நாம் அல்லாஹ்வுடன் நேரடியாக பேச போகிறோம். எனவே எந்த அளவிற்கு வாயை துர்வாடையை விட்டும் தற்காத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு தற்காத்துக் கொள்ளல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் இந்த (வெங்காயச்) செடியி லிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு உமர் (ரளி) நூல் : புகாரி (853)

மற்றொரு அறிவிப்பில்,

“யார் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை விட்டு விலகி அவரது இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதுபோன்ற துர்வாடையுடைய உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டால், அது தொழுகை நேரமாக இருப்பின் நன்றாக பல் தேய்த்து வாயிலுள்ள வாடை முற்றிலும் அகன்று விடுமளவிற்கு நன்றாக வாய் கொப்பளித்து விட்டு பள்ளிக்கு வந்து கூட்டாக (ஜமாஅத்தாக) தொழ வேண்டும்.

சப்தமிட்டு பேசலாகாது

இறையில்லங்களுக்கு சென்றால் தேவையில்லாத, உலக சம்பந்த மான பேச்சுகளை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும். சிலர், ஊர்கதை களை, வம்புகளை பேசுவதற்காக, புறம்பேசுவதற்காக, அரசியல் பேச இறையில்லங்களையே தேர்வு செய்கின்றனர்.

”இறைவனின் இல்லம்” என்றுகூட பாராமல் சப்தங்களை உயர்த்தி பிறருக்கு இடையூறு தருமளவிற்கு சிரித்தும், கைதட்டியும் இறை யில்லத்தின் கண்ணியத்தை கெடுத்துக் கொண்டிருப்பர். இவ்விதம் இறையில்லத்தில் சப்தங்களை உயர்த்துவது மறுமைநாளின் அடை யாளங்களில் ஒன்று” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“நபித்தோழர் ஹள்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரளி) அறிவிக்கிறார்கள். “நான் பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தபோது ஒரு மனிதர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது ஹள்ரத் உமர்பின் கத்தாப் (ரளி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் என்னிடம் நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் கேட்க “நாங்கள் தாயிஃப்வாசிகள்” என்று அவர்கள் கூறினர்.

அதற்கு ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதருடைய பள்ளிவாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரளி) நூல் : புகாரி (470)

அவ்விருவரும் உள்ளூர் (மதீனா) வாசிகளாக இருந்திருந்தால் இறை யில்லத்தில் கண்ணியக்குறைவாக நடந்ததால் நிச்சயமாக அடி விழுந் திருக்கும். வெளியூர்வாசிகளாக இருந்ததினால் எச்சரிக்கப்பட்டு அவ் விருவரும் விடப்பட்டார்கள்.

இறைவேதத்தை படிப்பதாக இருப்பினும், இறைவனை நினைவு கூறுவதாக (திக்ரு) இருப்பினும் பிறருக்கு இடையூறு தராத வகையில் அமைதியாகவே அவைகளை செய்ய வேண்டும்.

இன்று சில இறையில்லங்களில் தொழுகை நேரத்திலும், தொழுகை யில்லாத நேரத்திலும் ஒரு கூட்டம் அமர்ந்து கொண்டு என்னதான் பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற வரைமுறையின்றி கூப்பாடு போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

ஹள்ரத் உமர் (ரளி) போன்றோர் இன்றும் இருப்பின் இவர்களுக்கு “சவுக்கால்” கடுமையான தண்டனை கொடுப்பார்கள். இறையில்லங் களில் கண்டகண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை கொட்டுவது, வீணான கவிதைகளை இயற்றுவது, பாடுவது, வீண் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை கூடவே கூடாது.

இரண்டு ரக்அத் தொழுகை

“உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூகதாதா (ரளி) நூல் : புகாரி (444)

“தஹிய்யத்துல் மஸ்ஜித்” (பள்ளிவாசலின் காணிக்கை) தொழுகை இரண்டு ரக்அத்தை அமர்வதற்கு முன்பே தொழுக வேண்டும். இது ஒரு ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கங்களை கடைபிடிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக !




( மவ்லவீ எஃப். ஜமால் பாகவி, நெல்லை – 4 )

No comments:

Post a Comment