Saturday, December 22, 2012

கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டும்!

மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பான NCHRO சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20/12/2012இல் சென்னையில் நடந்தது.
 
NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தின் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
 
வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளை சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2004-ஆம் ஆண்டு ’பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடுமையான பிரிவுகள், சட்டத்திருத்தம் என்ற பெயரால் ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2008 இல் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கி கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களைப் பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.
 
ஜனநாயகத்துக்கு எதிரான இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக போராடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

No comments:

Post a Comment