Monday, August 20, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐயினர் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்!

 அசாம் கலவரத்தையும், பிரிவினையைத் தூண்டும் பாஜக தலைவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அசாம் கலவரத்தையும், பாஜக தலைவர்களையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

 இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட அசாம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி முயற்சியை மேற்கொள்ளவில்லை. இது அவர்களின் தகுதியற்ற ஆட்சி நிர்வாகத்தை வெளிக்காட்டுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக மதத்தின் அடிப்படையில் மக்களை கூறுபோடவே விரும்புகிறது. எனவே பாஜக பிரயோஜனமான கருத்துக்களை சொல்லட்டும் அல்லது வாய்மூடி மௌனமாக இருக்கட்டும். 

அசாம் கலவரத்தை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டத் நடத்தியவர்கள் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் வீட்டின் மீது கல்லெறிந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தாத காவல்துறை அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நடத்திய மியான்மர் அரசுக்கெதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தியா வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை மிகவும் பலவீனமாகிவிட்டது என்பதன் அடையாளமே இது. 

மியான்மரில் அமைதியை நிலைநாட்ட, அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 



No comments:

Post a Comment