Thursday, September 22, 2011

ஜமாஅத் தொழுகையை விடுவோர்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) …
அன்பான சகோதர, சகோதரிகளே!...
·         ஜமாஅத் தொழுகையை விடுவோர் '' கவனிக்கவும்'' எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர்ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்குசுன்னத்துல் ஹுதாவைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம்.

**மஸ்ஜிதுக்குச் நடந்து செல்வோரின் சிறப்பு**
"ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்...து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், "இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார்.(ஸஹீஹுல் புகாரி)
"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
உபை இப்னு கஅப் (ரலி)அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: "நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி அவர்கள், "(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்).


**ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்** ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: - “ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில்இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

**ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது** பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

**ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்** “ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது. ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து. தொழுகையை ஜமாஅத் தோட முறைப்படி (மஸ்ஜிது தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்..!

No comments:

Post a Comment