Monday, November 5, 2012

நீதிக்கான முழக்கம் - மண்டல மாநாடு : சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்’ ‘நீதிக்கான முழக்கம்’ என்ற கோஷத்தோடு சென்னை மண்டல மாநாடு 4.11.2012 அன்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் காயிதேமில்லத் திடலில் வைத்து நடைபெற்றது.

இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் S.M. ரஃபீக் அஹமது , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானிஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம்


காலை 10 மணிக்கு மாநாட்டு திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாலை 5.00 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையுரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதே வரலாறு நமக்குப் பகரும் சாட்சியாகும். நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித் மற்றும் முஸ்லிம்களை முன்னேற்ற அரசும் பயனுள்ள முயற்சிகளை எடுப்பதில்லை. இந்த சமூகங்களை முன்னேற்ற பாடுபடக்கூடிய கட்சி மற்றும் இயக்கங்களையும் நசுக்குவதில் குறியாக உள்ளது. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை அரசு மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள். நமது இந்திய ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு சிறிதளவும் மாறுபடாத வகையில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு தலித் சமுதாயம் துணை நிற்க தயாராக உள்ளது என்பதை இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல். திருமாவளவன்


பின்னர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தனது உரையில், உளவுத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள அதிகாரிகள் ஒருசார்பு நிலையில்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானிSDPI மாநில பொதுச் செயலாளர் S.M. ரஃபீக் அஹமது அவர்கள் பேசும் போது, “முஸ்லிம்கள் சுரண்டலுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும் போராடுபவர்கள். இந்த போராட்டத்தில் நிச்சயம் முஸ்லிம்களே வெற்றி பெறுவார்கள்“ என்று கூறினார்.

அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தனது உரையில், “அரசியல் சாசன சட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூரும் முகமாகவும் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். UAPA போன்ற கருப்புச் சட்டங்களால் அநியாயமாக கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறோம். இதுமட்டுமின்றி கல்வி, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டை குறி வைக்கின்றனர். பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். ஒடுக்கப்பட்டோர் சக்தியடைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில், “தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு உருவமே பாப்புலர் ஃப்ரண்ட் என்று சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் 2001ம் ஆண்டு சிமியை தடை செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 1989ல் இருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் சமூகப் பணிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா


இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் S. சஃபியுல்லாஹ் இருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தனர். நிறைவாக பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் E. ஷாஹித் முஹம்மது நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment