Saturday, July 23, 2011

நோன்பின் சிறப்பு

               'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!'' (என்று அல்லாஹ் கூறினான்) 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
                       ''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

    அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள்.

''ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 ''நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.. மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை'' என்று உள்ளது.

No comments:

Post a Comment