Monday, December 12, 2011

இட ஒதுக்கீடு கோரி தமிழக மாநகரங்களி​ல் மாபெரும் ஆர்ப்பாட்ட​ம் – பாப்புல​ர் ஃப்ரண்ட் அறிவிப்பு

முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டங்களை சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் நடத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மதுரையில் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.கடந்த நவம்பர் 26,27 தேதிகளில் டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு தேசிய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவில் சமூக நீதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்து பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்துள்ளார்கள். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்தினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

2.முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை உடனே நடைமுறைப்படுத்திட வழிவகை செய்யவேண்டும். மேலும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இப்பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து அமைதியை நிலை பெறச்செய்ய மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தாமதித்துக் கொண்டிருப்பதை மாநில செயற்குழு கண்டிக்கிறது. மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த பரிசீலனை செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில் 5 சதவீதம் ஒதுக்கீடாக உயர்த்தி வழங்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை, கோவை மற்றும் மதுரையில் வருகின்ற ஏப்ரல் 22,2012 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

4.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையங்களின் ஆபத்துகளை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் மாநில செயற்குழு கேட்டுகொள்கிறது.
 
இவ்வாறுஅவர் அறிக்கையில்கூறியுள்ளார்

No comments:

Post a Comment