Tuesday, October 30, 2012

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!

புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.

அஸ்ஸாம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்போர் உள்பட மேற்கு வங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 25 ஆயிரம் குடும்பத்தினருக்கும் தியாகப்பெருநாளில் அறுக்கப்பட்ட குர்பானி இறைச்சிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக ரிஹாப் பவுண்டேசனின் பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 2-வது வருடமாக ரிஹாப் , தியாகப்பெருநாளில் அறுக்கப்படும் குர்பானி இறைச்சியை விநியோகித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் பொட்டலங்களை உரிய நேரத்தில் விநியோகித்த தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு ரிஹாப் இந்தியா பவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு நிகழ்ச்சி

குவைத் நகரம்:ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைப்பந்து போட்டி, பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் எனப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதியாக முதலிடம் பிடித்தவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.  அப்பாஸியா, பர்வனியா, பாஹீல், சிட்டி ஆகிய நான்கு அணிகள் கபடி, கைப்பந்து, கயிறு இழுத்தல் போட்டிகளில் கலந்து கொண்டன.

சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் அப்பாஸியா அணி பட்டத்தைத் தட்டிச் சென்றது, இரண்டாம் இடத்தை சிட்டி அணி கைப்பற்றியது. போட்டியில் வென்றவர்களுக்கு இறுதியில் KIFF-ன் தலைவர் சகோ. அப்துல் சலாம் அவர்கள் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி கவுரவித்தார்.

மொத்த நிகழ்ச்சியையும் சகோ. ஷிஹாப் அவர்கள் தொகுத்து வழங்கினார். KIFF-ன் தன்னார்வத் தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Sunday, October 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர்.

பக்ரீத் என்றழைக்கப்படும் இந்தத் திருநாளில் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர்.

பழைய டெல்லியில் பாரம்பரியமிக்க உணவுகளான கபாப், பிரியாணி, நிஹாரி, கொர்மா ஆகிய உணவுகளுடன் பெருநாள் களை கட்டியது. அங்குள்ள தெருக்களிலும், சந்துகளிலும் இவை தயாரிக்கப்பட்ட மணம் எங்கும் பரவி நின்றது.

துப்ரி மாவட்டம், அஸ்ஸாம்:
கடந்த புதன்கிழமை இந்த மாவட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலினால் பதட்டம் நிலவியது. இதனால் பலத்த பாதுகாப்புக்கிடையில் பெருநாள் தொழுகைகளை முஸ்லிம்கள் நிறைவேற்றினர்.

லக்னோ, உ.பி:
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபைஸாபாத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையில் ஈத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன.

ஜம்மு கஷ்மீர்:
ஜம்மு கஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பெருநாள் தினம் அமைதியாகக் கழிந்தது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்திலும், ஏரலிலும் குர்பானீக்காக வந்த ஒட்டகங்கள் அனைவரையும் கவர்ந்தன.

Friday, October 26, 2012

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012: இலக்கியச்சோலை தமிழ் நூல்கள் பங்கேற்பு!

ஷார்ஜா:2012ம் ஆண்டிற்கான 31வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி நவம்பர் 07 முதல் 17 வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் இலக்கியச் சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன.
40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர் என்றும், இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்றும் கலாச்சாரம், தகவல் துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் இதில கலந்து கொள்ளும். இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் நாடுகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. சென்ற வருடம் 35 நாடுகளிலிருந்து 894 பதிப்பகத்தார் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இதில் 14 அரபு நாடுகளும், 21 வெளிநாடுகளும் அடங்கும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியின் பொது இயக்குனர் அஹமத் அல் அம்ரி பத்திரிகையாளர் சந்திப்பில் முதன் முதலாக இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டார். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலி, போலந்து, தாய்லாந்து, ரொமானியா, செர்பியா, சீனா, கனடா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்த வருடம் அரபு பதிப்பகத்தாரின் பரப்பளவு 7600 சதுர மீட்டரிலிருந்து 9613 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. அதேபோல் வெளிநாட்டுப் பதிப்பகத்தாரின் பரப்பளவு 1600 சதுர மீட்டரிலிருந்து 2100 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. இந்திய பதிப்பகத்தாரின் பங்கேற்பு சென்ற வருடத்தை விட 500 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

இந்த வருட கலாச்சார சாதனையாளர் விருதும் இக்கண்காட்சியில் வழங்கப்படும். இவ்வருடம் அந்த விருதை அமீரகக் கவிஞரும், எழுத்தாளருமான ஹபீப் அல் ஸாயிக் பெறவிருக்கிறார். மேலும் அமீரகப் பதிப்பகத்தாருக்கும், சிறந்த நூற்களுக்கும், சிறப்பாக அச்சடிக்கப்பட்ட நூலுக்கும், பொருளாதாரம் குறித்த சிறந்த வெளிநாட்டுப் புத்தகத்துக்கும் ஷார்ஜா விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சிறந்த அரபு குழந்தை இலக்கியத்திற்கான எத்திஸலாத் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் கண்காட்சியின் முதல் நாள் நடக்கும் துவக்க விழாவில் வழங்கப்படும்.

கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் கலாச்சாரம், தகவல் துறை பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தயாரித்திருக்கும் 200 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சென்ற வருடம் இக்கண்காட்சியில் கலந்துகொண்டவர்களில் 25 சதவீதம் பேர் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த வருடம் அது 35-40 சதவீதமாக அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரவி கூறினார். இந்திய பதிப்பகத்தாரின் எண்ணிக்கையும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காகியிருக்கிறது என்றும், தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) இந்த வருடம் கலந்துகொள்வது முக்கிய அம்சம் என்றும் மேலும் அவர் கூறினார்.

இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இக்கண்காட்சியில் ஒரே ஒரு தமிழ் பதிப்பகத்தின் நூல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை இலக்கியச்சோலையின் தமிழ் நூல்கள். தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் என்ற மலையாளப் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இலக்கியச் சோலையின் தமிழ் நூல்கள் கிடைக்கும்

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

மேலும், இந்த ஊழல் பணத்தை கொண்டு தனது கார் டிரைவர் உள்பட பல்வேறு பினாமிகளின் பெயர்களில் 18 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது தவிர தனது நிறுவனத்துக்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சிந்திக்கவும்: இந்நிலையில் கட்கரிக்கு கட்சியின் மானம் கெட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்று கழுவிற மீனில் நழுவுற மீனா ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
 
பின் குறிப்பு: கர்நாடக பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் இடையூரப்பா நில மோசடி முதல் பல்வேறு ஊழல்களை புரிந்தார். இப்பொழுது தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். இதுதான் இந்த கொள்கை கோமான்களின் யோக்கிதை.
*மலர் விழி*

Tuesday, October 23, 2012

புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் எடியூரப்பா!

பெங்களூர்:சுரங்க ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்  எடியூரப்பா, புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகா  தலைநகர் பெங்களூரில்   செய்தியாளர்களிடம்   பேசிய அவர், டிசம்பர் 10 ம்    தேதி புதிய  கட்சியை தொடங்க இருப்பதாகவும் விஜயதசமியான நாளை, அதற்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளதாகவும் கூறினார். புதிய கட்சிக்கு கர்நாடக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம் விலக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துவிட்டதாக கூறிய எடியூரப்பா, இனி பாரதிய ஜனதா தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றார்.

தென்மாநிலங்களில் முதன்முறையாக, கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்க காரணமாக கருதப்பட்ட எடியூரப்பா, ஊழல் புகார்களில் சிக்கி பதவியை இழந்தார். இதைத்தொடர்ந்து சதானந்த கவுடா முதலமைச்சரானார். ஆனால் அவருடன் மோதல் ஏற்பட்டதால் தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பதவி அல்லது மாநில தலைவர் பதவியை தமக்கு வழங்க கோரி பாரதிய ஜனதா மேலிடத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எடியூரப்பாவுக்கு பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து கட்சி செயல்பாடுகளில் இருந்து சிலகாலமாக விலகியிருந்த எடியூரப்பா, தற்போது புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Monday, October 22, 2012

2013 ம.பி. சட்டசபை தேர்தலில் SDPI போட்டி

போபால்:எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக  மாநில செயற்குழு எடுத்த  முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார்.

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அவர் கூறுகையில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.  மேலும் வருகின்ற புத்தாண்டு ஆரம்பத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தேசிய அளவில் எஸ் டி பி ஐ தொடங்கும் என்றும் அறிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸித்தீக்கி எஸ் டி பி ஐ கட்சி இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர்களுக்காக, குறிப்பாக சிறுபான்மையோர், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காகவும், அவர்களின் வளர்ச்சியை மீட்டு எடுபதற்காகவும் தன் காலடி பதித்து போராடி வருவதாக தெரிவித்தார். மேலும் எஸ் டி பி ஐ கட்சியின் கொள்கை குரலாக “பசியில் இருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை” அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் 13  மாவட்டங்களில் எஸ் டி பி ஐ யின் செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் எஸ் டி பி ஐ 11 மாவட்டங்களில்  நிறுவப்பட்டு பதினாறு மாவட்டங்களில் செயல்பட்டும் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற நீதிக்கான முழக்கம்

கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் (21.10.2012) அன்று கோவையில் மாபெரும் மண்டல மாநாடு நடைபெற்றது.

சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் வலிமைக்காகவும் போராடக்கூடிய சமூக இயக்கங்கள் மீது அவதூறை பரப்பி அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களின் போராட்டங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சில ஃபாசிஸ சிந்தனை கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஊடகங்களை மிகப்பெரும் ஆயுதங்களாக பயன்படுத்தி ஜனநாயக உரிமைக்காக போராடி வரும் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது விதிவிலக்கு இல்லாமல் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனை கண்டிக்கும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டினை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்றடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக சென்னை, கோவை மற்றும் மதுரை ம்ண்டல மாநாட்டினை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

"குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்! நீதிக்கான முழக்கம்!" என்ற கோஷத்தை முன்வைத்து "மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்" என்ற அடிப்படையில் மாபெரும் மண்டல மாநாடு கோவையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில், தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிற்கு ஆண்கள் பெண்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மற்றும் மதுரை மண்டல மாநாடுகள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.







Sunday, October 21, 2012

மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல செல்வந்தரும் கிங்ஃபிஷர் விமான நிறுவனம், கிங்ஃபிஷர் சாராய நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்  விஜய் மல்லையா வங்கிகளில் இருந்து வங்கிய கடன்தொகை 7000 கோடி ரூபாய்க்கு நாமம் போட்டார்.
 
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் பெரும்பான்மையான விமானிகள் பணிக்கு வரவில்லை. இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
 
இந்நிலையில் விமானங்களை இயக்காதது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. இதற்கு கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விளக்கம் திருப்தி அளிக்காததால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களில் விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பி வந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கின் பேரில் விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று பிடிவாரண்டு பிறபித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
சிந்திக்கவும்: மக்களின் பணம் 7000 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்று அதை கொண்டு சொகுசுவாழ்க்கை நடத்தினார் விஜய் மல்லையா. இவருக்கு அமெரிக்காவில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பெவர்லி கில்ஸ் (Beverly Hills, California ) சொகுசு பங்களா உள்ளது. மக்களை கொள்ளையடிக்கும் இவர்களை போன்ற பணக்கார்களுக்குத்தான் வங்கிகள் கடன் கொடுக்கும். டாட்டா, பிர்லா போன்ற பணக்காரகளின் வியாபாரங்கள் எல்லாம் அரசு கொடுக்கும் மாநியத்தில்தான் நடக்கின்றன. மானியம் எல்லாம் மக்களின் வரிப்பணமே.

Thursday, October 18, 2012

பூரண மது விலக்கு கோரி தமிழகம் முழுவதும் SDPI போராட்டம்!

சென்னை: பூரண மது விலக்கை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பல்வேறு நகரங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட SDPIயைச் சேர்ந்த 200 பேர் கைதாகியுள்ளனர். மதுரையிலும், மேட்டுப்பாளையத்திலும் போராட்டத்தில் ஈடுப்பட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகமும், பழனியில் தாலுகா அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.
அதே போல் கோவை மாவட்ட SDPI கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  புதன் கிழமை காலை 11.00 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ. முஸ்தஃபா தலைமை வகித்தார். SDPI மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பெண்கள், குழந்தைகள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட திரளான பொதுமக்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சுமார் 500 பேரை காவல்துறை கைது செய்தது.

Wednesday, October 17, 2012

குஜராத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை : ஜெர்மனி

புது தில்லி : நரேந்திர மோடி ஆளும் குஜராத் குறித்து ஜெர்மனி என்ன நிலைப்பாட்டை முன்பு எடுத்துள்ளதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

பிரிட்டனைப் போல் தாங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று அவர் தெளிவு படுத்தினார். குஜராத் மாநிலம் அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2002ல் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்குப் பின் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் குஜராத் மீது தடைகளை விதித்தன. குஜராத்துடன் தங்கள் அரசு ரீதியான தொடர்புகளை முறித்துக்கொண்டன. நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா விசா தர மறுத்தது.

ஆனால் கடந்த வாரம் பிரிட்டன் குஜராத் மீதான தன் நிலைப்பாட்டை மாற்றியது. குஜராத்துடன் அரசியல் ரீதியான தொடர்புகள் தொடரப்படும் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஜெர்மனி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறினார்.

“எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் ஆரம்பிக்கிறது. அது குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை. பிரிட்டன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அறிவிக்கும் முன்பு எங்களிடம் இப்படி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த மாற்றம் எங்கள் நிலைப்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மனியின் வியாபாரக் குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியையும், கலாச்சார நிகழ்ச்சியையும் ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்

Tuesday, October 16, 2012

திருவாரூரில் முண்டாசு கட்டி ம.ம.க போராட்டம்

தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டத்தின் மைய்யப்பகுதியான திருவாரூரில் இன்று 16-10-2012 காலை 10.30 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு முண்டாசு கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலைவர் கே.ஹெச்.நூர்தீன் அவர்கள் தலைமையில் பழைய இரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திருவாரூரின் முக்கிய பகுதிகளின் வழியாக கன்னட வெறியர்களை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டே புதிய இரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். 
புதிய இரயில் நிலையத்தை அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் தமுமுக ம.ம.க மாநில தலைவர் மவ்லவி.ஜே.எஸ்.ஆர். ரிபாயி ரஷாதி அவர்களும் ம.ம.க மாநில பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும், ம.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணப்பாண்டியன் அவர்களும், ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா அவர்களும், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்களும் கலந்துகொண்டு பேரணியை வழிநடத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக ம.ம.க மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் நன்றி கூறினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியினர் உள்பட மாவட்ட முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 







ஓர் உயிர் தியாகியின் ஜொலிக்கும் நினைவலைகள்!

“முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர்(ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்- (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. ” (அல்குர்ஆன் 33:23)

கேரள மாநிலத்தைச் சார்ந்த அபூபக்கர் மாஸ்டர். ஆசிரியராக பணியாற்றிய மனித நேய பண்பாளர். கடந்த 1992-ஆம் ஆண்டு (செப்டம்பர் 20) பாசிச சக்திகளால் கொலைச் செய்யப்பட்டார். அவர் உயிர் தியாகத்திற்கு இன்றோடு இருபது ஆண்டுகள் நிறைவுறுகின்றன.

இரண்டு தசாப்தங்களாக ஜொலிக்கும் நினைவலைகளில் பெளர்ணமி நிலவு போல அவரது தியாகம் லட்சிய கொள்கை வீரர்களின் உள்ளத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. உள்ளங்களில் இருந்து உள்ளங்களை நோக்கி பாயும் அவரது தியாகத்தின் நினைவுகள் உயர்ந்த லட்சியத்தை நோக்கி பீடு நடைபோடும் பல தலைமுறைகளில் உருவாகும் கர்ம வீரர்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

அர்ப்பணிப்பும், எதனையும் இழக்க தயாராகும் ஒரு லட்சிய வீரன் இறைவனின் திருப்தியை பெற்றுவிட்டால் என்ன நிகழுமோ அதுதான் அபூபக்கர் மாஸ்டருக்கு நேர்ந்தது. களங்கமற்ற உள்ளத்துடனும், புன்சிரிக்கும் முகத்துடனும் மக்களை நேசித்த அபூபக்கர் மாஸ்டர் பிறரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். நன்மைகளை ஆதரித்தவர், தீமைகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். இறைவன் அளித்த ஆரோக்கியமும், செல்வமும் தனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து கொண்ட அபூபக்கர் மாஸ்டர், தயங்கி நிற்காமல் சமூக பொறுப்புகளை தனது முதுகில் சுமந்துகொண்டார். சம்பளம் கிடைத்த உடனேயே அதில் ஒரு பகுதியை யாருக்கேனும் அளிக்கவேண்டும் என்ற அவசரம் அவரிடம் காணப்படும். மாணவர்களுக்கு நேசத்திற்குரிய ஆசிரியரான அபூபக்கர் மாஸ்டரால் ரகசியமாக உதவியைப் பெற்றவர்களில் ஒருவர் யார் தெரியுமா? அவரைக் கொலைச்செய்த கொலைக்காரன் ஒருவனின் காச நோய் பீடித்த தந்தை ஆவார்.

வாய்ப்புகளை தவறவிடக் கூடாது என கருதிய அபூ பக்கர் மாஸ்டர், நன்மைகளை நோக்கி விரைந்துக்கொண்டே இருந்தார். பொருளாதார பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் அவருக்கு செல்வ செழிப்புமிக்க இடங்களில் இருந்தெல்லாம் திருமண ஆலோசனைகள் வரத்துவங்கின. அவற்றையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.   ‘ஏழைப் பெண் ஒருவரை திருமணம் முடித்தால் அப்பெண்ணின் குடும்பத்தினரின் கஷ்டம் நீங்குமே’ என கருதினார் அபூபக்கர் மாஸ்டர். ஆனால், அவரது தூய எண்ணத்தை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இறுதியாக தனது 27-ஆவது வயதில் அவர் இரத்த சாட்சியாக மாறும்பொழுது கடனோ, பொறுப்புகளோ எதையும் அவர் சுமக்கவில்லை. இறைவனின் நாட்டம் போல சுதந்திரமான, வெற்றிப்பெற்ற மனிதனாக அவர் அல்லாஹ்வை நோக்கி பயணித்தார். பெரும் மக்கள் கூட்டத்துடன் அவரது ஜனாஸா(உடல்) வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பொழுது வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுதுகொண்டிருந்த லட்சுமி என்ற பெண்மணியை பலரும் கண்டனர். நோயாளியான அந்த பெண்மணிக்கு இதுநாள் வரை மருந்துகளை வாங்கி கொடுத்தது அபூபக்கர் மாஸ்டர் தாம் என்பதை அப்பொழுதுதான் பலரும் அறிந்தனர். நன்மைகள் நிறைந்த இந்த மனிதரை சாத்தானிய சக்திகளால் மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர்கள் இரவின் இருளுக்காக காத்திருந்தார்கள். அந்த லட்சிய வீரனின் சூடான குருதிக்காக தாகித்தார்கள்.

நன்மைகள் நிறைந்த அந்த மனிதர் யாருக்கும் தொந்தரவாக இருந்ததில்லை. யாரிடமும் சண்டைக்குப் போனதும் இல்லை. எந்த மோதலிலும் ஈடுபட்டதில்லை. சாத்தானிய சக்திகள் வாழும் இவ்வுலகில் நன்மைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையே மிகப்பெரிய நெருக்கடியையும், கொந்தளிப்பையும் உருவாக்கும் என்பதை அபூபக்கர் மாஸ்டரின் உயிர் தியாகத்திலிருந்து நமக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

இளமைப் பருவம்! அது ஒரு வாழ்க்கையின் வசந்த காலம்! கனவுகளும், மோகங்களும் நிறைந்ததொரு வாழ்க்கையை லட்சிய கொள்கைக்காக அர்ப்பணிப்பதை விட வேறு ஏதேனும் நன்மை உண்டா? அபூபக்கர் மாஸ்டர் வாழ்க்கை அவ்வாறுதான் அமைந்தது. வரலாற்றில் சொந்த இரத்தத்தால் எழுதப்பட்ட அபூபக்கர் மாஸ்டரின் வாழ்க்கை தரும் பாடத்தை ஒரு போதும் மாய்ந்து போகாத வழி அடையாளமாக சுமப்போம். அது லட்சியங்களையே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு உந்துசக்தியாக மாறும்.

“இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை  (அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154)
அ.செய்யது அலீ

டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து  மக்களிடையே போதிய
விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.

சிந்திக்கவும்: சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள்  சுகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.

Sunday, October 14, 2012

“பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?” – பிரச்சாரம் துவங்கியது

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் “பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?” என்ற பிரச்சாரம் அக்டோபர் 10 அன்று துவங்கப்பட்டது.



நவம்பர் 10 – 2012 வரை நடைபெற இருக்கும் இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தும், தங்களுக்கு அருகில் வசிப்பவர்களை ஒன்று கூட்டியும் பிரச்சாரத்தினை மேற்கொள்வார்கள். இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டை அறிமுகப்படுத்தும் சிறு கையேடுகள் விநியோகம், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவை நாட்டின் பல மாநிலங்களில் ஆங்கிலம், ஹிந்தி, உருது, பெங்காலி, மணிப்பூரி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரச்சாரம், தெரு முனைப்பிரச்சாரம் போன்றவை பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) இந்திய கிராமங்கள், நகரங்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கேரள மாநிலத்தில், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் மூன்று பிரம்மாண்ட மண்டல மாநாடுகளை நடத்த தீர்மானித்துள்ளது.

தமிழகத்தில் நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பிரம்மாண்டமான மண்டல மாநாடுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மக்கள் மாநாடு என்ற தலைப்பில் பெங்களூர், குல்பர்கா, மைசூர், மற்றும் மங்களூரில் பிரம்மாண்ட மாநாடுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கர்னூலில் பெரியளவிலான மண்டல மாநாடும், இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தேச ஒற்றுமை மாநாடு என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இதுபோன்ற பெரியளவிலான மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளன.

பிரச்சாரத்தின் இறுதியில் பல மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி மக்கள் ஒருங்கிணைப்பு என்ற நிகழ்ச்சி ஒன்று புதுதில்லியில் வைத்து நடைபெறும்.

நிர்வாகம், போலீஸ் மற்றும் உளவுத்துறையில் உள்ள சிலர் வலதுசாரி (இந்துத்துவ) சிந்தனை மற்றும் மதவாதத்தினால் ஈர்க்கப்பட்டு பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

சமூகத்தில் பலஹீனமான மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் விதமாக தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கமான பாப்பு-லர் ஃப்ரண்டை குறிவைப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சமநீதி கிடைப்பதை தடை செய்வதற்கான முயற்சியில்அவர்கள் இறங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் இயக்கங்களை குறிவைப்பது, தடைகளை ஏற்படுத்துவது என்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை கேலி செய்வது போன்று உள்ளது.

மேலும்  இப்பிரச்சாரம் சட்டவிரோதமாக  கைது  செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளின் விடுதலை மற்றும் மக்கள் விரோத கருப்புச் சட்டங்களான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்றவற்றை திரும்பப் பெறவும் வலியுறுத்தும்.

நாட்டின் அனைத்து குடிமக்களும் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமுகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும் மேற் கொள்ளப்படும் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தரும்படி பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு மாநிலச் செயலாளர் எம். ஷேக். முஹம்மது அன்சாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை

12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை மாணவ மாணவியருக்கு தங்களின் கல்லூரி படிப்பு கட்டணத்தை கட்ட உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட்டியில்லா கடன் உதவி வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 லட்ச ரூபாய்க்கான கல்வி உதவி வழங்கப்பட்டது.
இவ்வாண்டும் (2012) பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த கல்வி உதவியினை பெற மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி தொகை வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட 54 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சென்னையில் 14.10.2012 அன்று மதியம் 2:15 மணியளவில் உதவித்தொகை வழங்கும் விழா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. க‌ஃபூர் இமாம் இறைவசனங்களை ஓதி இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு ரூபாய் 68,000/-ற்கான  உதவித்தொகையினை வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சமூக மேம்பாட்டுத்துறையின் ஒருங்கினைப்பாளருமான சகோ. ஜுனைத் அன்சாரி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ முத்து அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான் மற்றும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் ஆபிருதீன் இமாம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  உதவித்தொகை பெறவந்த மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

Saturday, October 13, 2012

இஸ்ரேல் சுட்டுத் தள்ளியது ஹிஸ்புல்லாஹ்வின் விமானம்!

பெய்ரூத்:இஸ்ரேலை நோக்கி ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) அனுப்பியது லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான அல் மனார் தொலைக்காட்சியில் அதன் ஹசன் நஸ்ருல்லாஹ் இதனை அறிவித்தார்.

ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் லெபனானில் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிறகு அந்த ஆளில்லா விமானம் இஸ்ரேலை நோக்கி அனுப்பப்பட்டது.

Friday, October 12, 2012

தேனிலவில் உலவும் காவியும், செங்கொடியும்!

ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று கேரளாவில் தேனிலவில் கொஞ்சிக் குலாவுகின்றன.

சமீபத்தில் வடக்கு கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத்(ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச்  சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து விட்டு” வந்தார்.
பதிலுக்கு அதே மாவட்டத்திலுள்ள பானூர் என்ற ஊரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ். குலக் கொழுந்துகள் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டு “துக்கம் விசாரித்து விட்டு” வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மலையாளப் பத்திரிகையான “கேசரி”யில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தக் க்ட்டுரையை ஆர்.எஸ்.எஸ்.ஸின் “அறிவுஜீவிகளின்” பிரிவான பாரதீய விசார கேந்திரத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.ஜி. மோகன்தாஸ் எழுதியுள்ளார்.

இந்த இரு அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும், “நண்பர்களாக” மாறவேண்டும் என்று அந்தக் கட்டுரையில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த இருபதாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கொலை மோதல்களில் ஈடுபட்டதில் 150 வரை அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. அப்படியிருக்க இப்பொழுது இந்தக் “கொள்கை கோமேதகங்கள்” ஒன்று சேரக் காரணம் என்ன?

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த இரு கொலைகார அமைப்புகளும் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வார்கள். அத்தோடு முஸ்லிம்களையும் கொன்றொழித்தார்கள். முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடினார்கள். ஆனால் சமீப காலங்களில் தென்னிந்தியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பயனாக அவர்களால் இப்பொழுது பழைய மாதிரி வாலாட்ட முடியவில்லை. பழைய வேகத்தில் அவர்களால் முஸ்லிம்களைத் தாக்க முடியவில்லை. முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி எனும் தடுப்புச் சுவரில் அவரகளின் தலை இப்பொழுது மோதுகின்றது.

ஒரு தரப்புச் சேதங்களே இருந்த காலம் போய் இன்று இரு பக்கமும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஆக, இருவருக்கும் பொது எதிரியான முஸ்லிம்களை “எதிர் கொள்வதற்கு” இன்று இந்த இரு குண்டர் அமைப்புகளும் ஒன்று சேர முயற்சி செய்கின்றன.

அதன் விளைவாகத்தான், ஃபாசிச “கேசரி”யில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆகா, ஓகோ என்று புகழ்கின்றது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் நாத்திகர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையாளர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை என்று ஆரூடம் சொல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அப்துந் நாஸர் மஃதனியின் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி வைத்தது என்பதால் அது முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையில்லை என்கிறது. அது தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று சமாதானம் கூறுகிறது.

இந்த இரு அமைப்புகளும் ஊழலுக்கெதிராகப் “போராடும்” அமைப்புகளாம், ஆதலால் இரண்டும் இணைவது காலத்தின் கட்டாயமாம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இருந்தாலும் ஃபாசிசம் பாசத்தை அதிகம் காட்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது, இந்தக் கருத்து கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வக் கருத்து இல்லை என்றும் ஹிந்துத்துவ ஃபாசிசத் தலைவர்கள் கூறும் அதே வேளை, “யாரும் எங்களுக்குத் தீண்டத்தகாதவர்கள் இல்லை” என்று தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இதனைப் படித்தவுடன் அவர்களிடம், அதாவது அவாள்களிடம் தலைவிரித்தாடும் தீண்டாமையை யாரும் எண்ணிவிட வேண்டாம். அவர்கள் சொல்வது “அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்ற அரதப் பழமொழி உண்டல்லவா, அதைத்தான் நவநாகரிகமாகச் சொல்லியுள்ளார்கள்.

இதைத்தான் பா.ஜ.க. தலைவர் ஓ. ராஜகோபால் இப்படிச் சொல்கிறார் : “அரசியல் கட்சிகள் ‘பொதுவான காரியத்திற்காக’ ஒன்று சேர்வதில் தவறில்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை!”
இந்தப் “பொதுவான காரியத்திற்காக” என்றால் முஸ்லிம்களைக் கொல்வதற்காக என்று நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைக்குக் கூட இந்த மொழி புரியும்.

ஆனால் கீழே உள்ள “கொள்கைக் குன்றுகளான தொண்டர் குண்டர்கள்” ஒன்று சேரத் துடிக்கும் பொழுதும், மேலே உள்ள கொள்கைக் குலக் கொழுந்துகளான தலைவர்களுக்கு இதனை ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் “கேசரி”யில் வெளிவந்துள்ள கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம்.மின் ஆட்சிக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி இவ்வாறு கூறுகிறார்: “வகுப்புவாத சிந்தனையையும், ஃபாசிசத்தையும் பரப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. அதனைத் தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்தான் ஆசைப்படுகிறார்கள்.”

ஆக, வேதாளம் கிளம்பியது ஹிந்துத்துவ ஃபாசிசப் புற்றிலிருந்துதான் என்கிறார் அவர். அதனால்தானோ என்னவோ வடக்கு கேரளாவில் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் வெட்டு குத்து கொலைப் பகையோடு காலங்கடத்திக் கொண்டிருந்த இந்த இரு அமைப்பினருக்கிடையில் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பெரிய வன்முறைகளும் நடைபெறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்களைக் கொல்வதற்கு, முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடுவதற்கு, முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு, முஸ்லிம் பிஞ்சுக் குழந்தைகளை வெட்டிப் பிளந்து போடுவதற்கு – மொத்தத்தில் முஸ்லிம் ரத்தத்தைக் குடிப்பதற்கு எவ்வளவு பெரிய கொடும் பகையாளர்களும் ஒன்று சேர்வார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
MSAH

Monday, October 1, 2012

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை உருவாக்கும் ஈரான்!

டெஹ்ரான்:இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

NWF சார்பாக வரதட்சணை எதிர்ப்பு கருத்தரங்கம்

             விகளத்தூரில் நேஷனல் விமென்ஸ் பிரன்ட் (NWF) சார்பாக வரதட்சணை ஒழிப்பு பிரசார கருத்தரங்கம் 28-09-2012 அன்று மதியம் 02.30 மணிக்கு நடைபெற்றது. நேஷனல் விமென்ஸ் பிரன்ட் (NWF) நெல்லை மாவட்ட செயலாளர் பாத்திமா சிறப்புரையாற்றினார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.