Friday, October 26, 2012

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012: இலக்கியச்சோலை தமிழ் நூல்கள் பங்கேற்பு!

ஷார்ஜா:2012ம் ஆண்டிற்கான 31வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி நவம்பர் 07 முதல் 17 வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் இலக்கியச் சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன.
40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர் என்றும், இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்றும் கலாச்சாரம், தகவல் துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் இதில கலந்து கொள்ளும். இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் நாடுகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. சென்ற வருடம் 35 நாடுகளிலிருந்து 894 பதிப்பகத்தார் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இதில் 14 அரபு நாடுகளும், 21 வெளிநாடுகளும் அடங்கும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியின் பொது இயக்குனர் அஹமத் அல் அம்ரி பத்திரிகையாளர் சந்திப்பில் முதன் முதலாக இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டார். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலி, போலந்து, தாய்லாந்து, ரொமானியா, செர்பியா, சீனா, கனடா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்த வருடம் அரபு பதிப்பகத்தாரின் பரப்பளவு 7600 சதுர மீட்டரிலிருந்து 9613 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. அதேபோல் வெளிநாட்டுப் பதிப்பகத்தாரின் பரப்பளவு 1600 சதுர மீட்டரிலிருந்து 2100 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. இந்திய பதிப்பகத்தாரின் பங்கேற்பு சென்ற வருடத்தை விட 500 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

இந்த வருட கலாச்சார சாதனையாளர் விருதும் இக்கண்காட்சியில் வழங்கப்படும். இவ்வருடம் அந்த விருதை அமீரகக் கவிஞரும், எழுத்தாளருமான ஹபீப் அல் ஸாயிக் பெறவிருக்கிறார். மேலும் அமீரகப் பதிப்பகத்தாருக்கும், சிறந்த நூற்களுக்கும், சிறப்பாக அச்சடிக்கப்பட்ட நூலுக்கும், பொருளாதாரம் குறித்த சிறந்த வெளிநாட்டுப் புத்தகத்துக்கும் ஷார்ஜா விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சிறந்த அரபு குழந்தை இலக்கியத்திற்கான எத்திஸலாத் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் கண்காட்சியின் முதல் நாள் நடக்கும் துவக்க விழாவில் வழங்கப்படும்.

கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் கலாச்சாரம், தகவல் துறை பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தயாரித்திருக்கும் 200 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சென்ற வருடம் இக்கண்காட்சியில் கலந்துகொண்டவர்களில் 25 சதவீதம் பேர் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த வருடம் அது 35-40 சதவீதமாக அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரவி கூறினார். இந்திய பதிப்பகத்தாரின் எண்ணிக்கையும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காகியிருக்கிறது என்றும், தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) இந்த வருடம் கலந்துகொள்வது முக்கிய அம்சம் என்றும் மேலும் அவர் கூறினார்.

இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இக்கண்காட்சியில் ஒரே ஒரு தமிழ் பதிப்பகத்தின் நூல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை இலக்கியச்சோலையின் தமிழ் நூல்கள். தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் என்ற மலையாளப் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இலக்கியச் சோலையின் தமிழ் நூல்கள் கிடைக்கும்

No comments:

Post a Comment