Tuesday, October 23, 2012

புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் எடியூரப்பா!

பெங்களூர்:சுரங்க ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்  எடியூரப்பா, புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகா  தலைநகர் பெங்களூரில்   செய்தியாளர்களிடம்   பேசிய அவர், டிசம்பர் 10 ம்    தேதி புதிய  கட்சியை தொடங்க இருப்பதாகவும் விஜயதசமியான நாளை, அதற்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளதாகவும் கூறினார். புதிய கட்சிக்கு கர்நாடக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம் விலக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துவிட்டதாக கூறிய எடியூரப்பா, இனி பாரதிய ஜனதா தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றார்.

தென்மாநிலங்களில் முதன்முறையாக, கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்க காரணமாக கருதப்பட்ட எடியூரப்பா, ஊழல் புகார்களில் சிக்கி பதவியை இழந்தார். இதைத்தொடர்ந்து சதானந்த கவுடா முதலமைச்சரானார். ஆனால் அவருடன் மோதல் ஏற்பட்டதால் தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பதவி அல்லது மாநில தலைவர் பதவியை தமக்கு வழங்க கோரி பாரதிய ஜனதா மேலிடத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எடியூரப்பாவுக்கு பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து கட்சி செயல்பாடுகளில் இருந்து சிலகாலமாக விலகியிருந்த எடியூரப்பா, தற்போது புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment