Sunday, October 14, 2012

“பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?” – பிரச்சாரம் துவங்கியது

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் “பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?” என்ற பிரச்சாரம் அக்டோபர் 10 அன்று துவங்கப்பட்டது.நவம்பர் 10 – 2012 வரை நடைபெற இருக்கும் இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தும், தங்களுக்கு அருகில் வசிப்பவர்களை ஒன்று கூட்டியும் பிரச்சாரத்தினை மேற்கொள்வார்கள். இப்பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டை அறிமுகப்படுத்தும் சிறு கையேடுகள் விநியோகம், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவை நாட்டின் பல மாநிலங்களில் ஆங்கிலம், ஹிந்தி, உருது, பெங்காலி, மணிப்பூரி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரச்சாரம், தெரு முனைப்பிரச்சாரம் போன்றவை பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) இந்திய கிராமங்கள், நகரங்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கேரள மாநிலத்தில், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் மூன்று பிரம்மாண்ட மண்டல மாநாடுகளை நடத்த தீர்மானித்துள்ளது.

தமிழகத்தில் நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பிரம்மாண்டமான மண்டல மாநாடுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மக்கள் மாநாடு என்ற தலைப்பில் பெங்களூர், குல்பர்கா, மைசூர், மற்றும் மங்களூரில் பிரம்மாண்ட மாநாடுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கர்னூலில் பெரியளவிலான மண்டல மாநாடும், இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தேச ஒற்றுமை மாநாடு என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இதுபோன்ற பெரியளவிலான மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளன.

பிரச்சாரத்தின் இறுதியில் பல மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி மக்கள் ஒருங்கிணைப்பு என்ற நிகழ்ச்சி ஒன்று புதுதில்லியில் வைத்து நடைபெறும்.

நிர்வாகம், போலீஸ் மற்றும் உளவுத்துறையில் உள்ள சிலர் வலதுசாரி (இந்துத்துவ) சிந்தனை மற்றும் மதவாதத்தினால் ஈர்க்கப்பட்டு பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

சமூகத்தில் பலஹீனமான மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் விதமாக தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கமான பாப்பு-லர் ஃப்ரண்டை குறிவைப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சமநீதி கிடைப்பதை தடை செய்வதற்கான முயற்சியில்அவர்கள் இறங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் இயக்கங்களை குறிவைப்பது, தடைகளை ஏற்படுத்துவது என்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை கேலி செய்வது போன்று உள்ளது.

மேலும்  இப்பிரச்சாரம் சட்டவிரோதமாக  கைது  செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளின் விடுதலை மற்றும் மக்கள் விரோத கருப்புச் சட்டங்களான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்றவற்றை திரும்பப் பெறவும் வலியுறுத்தும்.

நாட்டின் அனைத்து குடிமக்களும் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமுகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும் மேற் கொள்ளப்படும் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தரும்படி பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு மாநிலச் செயலாளர் எம். ஷேக். முஹம்மது அன்சாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment