Wednesday, October 17, 2012

குஜராத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை : ஜெர்மனி

புது தில்லி : நரேந்திர மோடி ஆளும் குஜராத் குறித்து ஜெர்மனி என்ன நிலைப்பாட்டை முன்பு எடுத்துள்ளதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

பிரிட்டனைப் போல் தாங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று அவர் தெளிவு படுத்தினார். குஜராத் மாநிலம் அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2002ல் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்குப் பின் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் குஜராத் மீது தடைகளை விதித்தன. குஜராத்துடன் தங்கள் அரசு ரீதியான தொடர்புகளை முறித்துக்கொண்டன. நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா விசா தர மறுத்தது.

ஆனால் கடந்த வாரம் பிரிட்டன் குஜராத் மீதான தன் நிலைப்பாட்டை மாற்றியது. குஜராத்துடன் அரசியல் ரீதியான தொடர்புகள் தொடரப்படும் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஜெர்மனி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறினார்.

“எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் ஆரம்பிக்கிறது. அது குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை. பிரிட்டன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அறிவிக்கும் முன்பு எங்களிடம் இப்படி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த மாற்றம் எங்கள் நிலைப்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மனியின் வியாபாரக் குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியையும், கலாச்சார நிகழ்ச்சியையும் ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்

No comments:

Post a Comment