Tuesday, October 16, 2012

ஓர் உயிர் தியாகியின் ஜொலிக்கும் நினைவலைகள்!

“முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர்(ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்- (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. ” (அல்குர்ஆன் 33:23)

கேரள மாநிலத்தைச் சார்ந்த அபூபக்கர் மாஸ்டர். ஆசிரியராக பணியாற்றிய மனித நேய பண்பாளர். கடந்த 1992-ஆம் ஆண்டு (செப்டம்பர் 20) பாசிச சக்திகளால் கொலைச் செய்யப்பட்டார். அவர் உயிர் தியாகத்திற்கு இன்றோடு இருபது ஆண்டுகள் நிறைவுறுகின்றன.

இரண்டு தசாப்தங்களாக ஜொலிக்கும் நினைவலைகளில் பெளர்ணமி நிலவு போல அவரது தியாகம் லட்சிய கொள்கை வீரர்களின் உள்ளத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. உள்ளங்களில் இருந்து உள்ளங்களை நோக்கி பாயும் அவரது தியாகத்தின் நினைவுகள் உயர்ந்த லட்சியத்தை நோக்கி பீடு நடைபோடும் பல தலைமுறைகளில் உருவாகும் கர்ம வீரர்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

அர்ப்பணிப்பும், எதனையும் இழக்க தயாராகும் ஒரு லட்சிய வீரன் இறைவனின் திருப்தியை பெற்றுவிட்டால் என்ன நிகழுமோ அதுதான் அபூபக்கர் மாஸ்டருக்கு நேர்ந்தது. களங்கமற்ற உள்ளத்துடனும், புன்சிரிக்கும் முகத்துடனும் மக்களை நேசித்த அபூபக்கர் மாஸ்டர் பிறரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். நன்மைகளை ஆதரித்தவர், தீமைகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். இறைவன் அளித்த ஆரோக்கியமும், செல்வமும் தனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து கொண்ட அபூபக்கர் மாஸ்டர், தயங்கி நிற்காமல் சமூக பொறுப்புகளை தனது முதுகில் சுமந்துகொண்டார். சம்பளம் கிடைத்த உடனேயே அதில் ஒரு பகுதியை யாருக்கேனும் அளிக்கவேண்டும் என்ற அவசரம் அவரிடம் காணப்படும். மாணவர்களுக்கு நேசத்திற்குரிய ஆசிரியரான அபூபக்கர் மாஸ்டரால் ரகசியமாக உதவியைப் பெற்றவர்களில் ஒருவர் யார் தெரியுமா? அவரைக் கொலைச்செய்த கொலைக்காரன் ஒருவனின் காச நோய் பீடித்த தந்தை ஆவார்.

வாய்ப்புகளை தவறவிடக் கூடாது என கருதிய அபூ பக்கர் மாஸ்டர், நன்மைகளை நோக்கி விரைந்துக்கொண்டே இருந்தார். பொருளாதார பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் அவருக்கு செல்வ செழிப்புமிக்க இடங்களில் இருந்தெல்லாம் திருமண ஆலோசனைகள் வரத்துவங்கின. அவற்றையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.   ‘ஏழைப் பெண் ஒருவரை திருமணம் முடித்தால் அப்பெண்ணின் குடும்பத்தினரின் கஷ்டம் நீங்குமே’ என கருதினார் அபூபக்கர் மாஸ்டர். ஆனால், அவரது தூய எண்ணத்தை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இறுதியாக தனது 27-ஆவது வயதில் அவர் இரத்த சாட்சியாக மாறும்பொழுது கடனோ, பொறுப்புகளோ எதையும் அவர் சுமக்கவில்லை. இறைவனின் நாட்டம் போல சுதந்திரமான, வெற்றிப்பெற்ற மனிதனாக அவர் அல்லாஹ்வை நோக்கி பயணித்தார். பெரும் மக்கள் கூட்டத்துடன் அவரது ஜனாஸா(உடல்) வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பொழுது வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுதுகொண்டிருந்த லட்சுமி என்ற பெண்மணியை பலரும் கண்டனர். நோயாளியான அந்த பெண்மணிக்கு இதுநாள் வரை மருந்துகளை வாங்கி கொடுத்தது அபூபக்கர் மாஸ்டர் தாம் என்பதை அப்பொழுதுதான் பலரும் அறிந்தனர். நன்மைகள் நிறைந்த இந்த மனிதரை சாத்தானிய சக்திகளால் மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர்கள் இரவின் இருளுக்காக காத்திருந்தார்கள். அந்த லட்சிய வீரனின் சூடான குருதிக்காக தாகித்தார்கள்.

நன்மைகள் நிறைந்த அந்த மனிதர் யாருக்கும் தொந்தரவாக இருந்ததில்லை. யாரிடமும் சண்டைக்குப் போனதும் இல்லை. எந்த மோதலிலும் ஈடுபட்டதில்லை. சாத்தானிய சக்திகள் வாழும் இவ்வுலகில் நன்மைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையே மிகப்பெரிய நெருக்கடியையும், கொந்தளிப்பையும் உருவாக்கும் என்பதை அபூபக்கர் மாஸ்டரின் உயிர் தியாகத்திலிருந்து நமக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

இளமைப் பருவம்! அது ஒரு வாழ்க்கையின் வசந்த காலம்! கனவுகளும், மோகங்களும் நிறைந்ததொரு வாழ்க்கையை லட்சிய கொள்கைக்காக அர்ப்பணிப்பதை விட வேறு ஏதேனும் நன்மை உண்டா? அபூபக்கர் மாஸ்டர் வாழ்க்கை அவ்வாறுதான் அமைந்தது. வரலாற்றில் சொந்த இரத்தத்தால் எழுதப்பட்ட அபூபக்கர் மாஸ்டரின் வாழ்க்கை தரும் பாடத்தை ஒரு போதும் மாய்ந்து போகாத வழி அடையாளமாக சுமப்போம். அது லட்சியங்களையே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு உந்துசக்தியாக மாறும்.

“இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை  (அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154)
அ.செய்யது அலீ

No comments:

Post a Comment