Friday, October 28, 2011

*குர்பானியின் சட்டங்கள் *

அன்பார்ந்த சகோதர்களே 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

யார்மீது கடமை?

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : பராஃ (ரலி) நூல் : புகாரி (955).

குர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.  யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (954)

ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலுள்ள ஹதீஸில் அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்கள், இந்தக் கட்டளையும் குர்பானியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது..
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.  அறிவிப்பவர் : சவ்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (3649)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.  அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (5554)

நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறவிப்பவர் பராஃ (ரலி) நூல் புகாரி (951)

குர்பானி கொடுக்கும் படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டையிடுகிறான். நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற விளக்கம் குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் அவர்களுடைய சமூகத்தாருக்கும் உரியதாகும்.
(
முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108 : 1,2)

கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.  அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : பைஹகீ (19021)

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.
 
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7288)

வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.  எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.  (அல்குர்ஆன் 2 : 286)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3498

No comments:

Post a Comment