Saturday, October 8, 2011

சஞ்சீவ் பட் கைது விவகாரம் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

பெங்களூர்:  குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி கைது  செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஒருவரின் கொலை விவகாரத்தில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் முன்னால் மந்திரி அமித் ஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனு ஒன்றை அளித்தார். இது நடந்த பிறகு அவர் பொய்யான வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் எனக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சார்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் விபரம் வருமாறு:


பெறுநர்:

மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களுக்கு,
புதுடெல்லி.

தலைப்பு: குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது நடவடிக்கையில் மத்திய அரசு தலையிட கோரி.

பிரதமர் அவர்களே,

குஜராத் காவல்துறையினரால் அம்மாநில காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றே பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது. மீண்டும் ஒருமுறை குஜராத் அரசின் சர்வாதிகார போக்கையே இது வெளிப்படுத்துகிறது. குஜராத் அரசாங்கம் காவல்துறையை மக்களுக்கு எதிராக தவறான முறையில் உபயோகப்படுத்திவருகிறது.

இந்தியாவில் குறிப்பாக அதுவும் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் காவல்துறையினர் தங்களது அரசியல் தலைவர்களை திருப்தி படுத்துவதற்காக அநீதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் பட் மீது தொடரப்பட்ட இந்த‌ வழக்கின் பின்னனி அநீதிக்கு எதிரான அவர் போராடுவதை தடுக்கவும் அதே சமயம் இவ்வாறு ஈடுபட நினைக்கும் மற்றவர்களை மிரட்டுவதற்காகவுமே அன்றி வேறில்லை. நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும் காவல்துறையினர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதற்காக அவருக்கு ஆதராவன் காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. பொய் வழக்குகளை சஞ்சீவ் பட் மீது தொடுத்து அவரை அவமானப்படுத்தவே இத்தகைய செயல்களை நரேந்திர மோடி செய்துவருகிறார்.

சமீபகாலமாக குஜராத்தில் சஞ்சீவ் பட் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுவருகிறார். ஸ்ரீ ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு எதிரான ஆதாரங்களை குஜராத் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்திருக்கிறார் சஞ்சீவ் பட். அன்றிலிருந்தே அவரை முடக்குவதற்கான எல்லா வேலைகளிலும் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீ ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கு தொடர்பாக அவர் ஆதாரங்களை கொடுப்பதற்கு முன்னர் நரேந்திர மோடி மற்றும் பல அரசியல்வாதிகளால் தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் புகார் அளித்திருக்கிறார்.

இதற்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதொடு மட்டுமல்லாமல் பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார். தற்போது நரேந்திர மோடி அவர் மீது பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்துள்ளார். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலையாகும், காரணம் உண்மையை பேசியதற்காக அவர் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த போதிலும் அவர் மீது இத்தகையை பொய் வழக்கு போடப்படுகிறது. நிலைகள் இப்படி இருக்க குஜராத்தில் பாமர மக்களின் நிலமை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாட்டின் குடிமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் ஒரு சர்வதிகார ஆட்சியை குஜராத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தாங்கள் முடிவெடுப்பதே சட்டம் என்ற நிலையை ஏற்படுத்தி பாமர மக்களின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இப்பேற்பட்ட அரசாங்கம் தொடர்வதை தடுக்காவிட்டால் பின்னர் நாட்டு மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அநீதிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. காலதாமதம் இல்லாமல் செயல்பட்டால் மக்களிடம் இந்திய சட்டத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும். அது போன்று குஜராத அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் உடனடியாக விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

நன்றி!

இப்படிக்கு

இலியாஸ் முஹம்மது தும்பே
மாநிலத்தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட், கர்நாடகா


No comments:

Post a Comment