Friday, October 28, 2011

பயங்கரவாதத் தொடர்பை மறைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி

புது தில்லி, அக்.27: பயங்கரவாதிகளுடன் தங்களுக்குள்ள தொடர்பை மறைப்பதற்காக பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்-ம் முயற்சிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்காக அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை அவை பயன்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





திக்விஜய் சிங் தனது இணையதளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சித்து இவ்வாறு எழுதியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புண்டு. இந்த உண்மையை நாட்டு மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதில் இரு அமைப்புகளும் முனைப்பு காட்டுகின்றன.

மக்கள் கவனத்தைத் திசைத் திருப்ப அவை திட்டங்களை வகுத்து செயல்படுகின்றன. அந்த வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ்சின் திட்டம் "ஏ'-தான் யோகா குரு பாபா ராம்தேவ். திட்டம் "பி' காந்தியவாதி அண்ணா ஹசாரே. திட்டம் "சி' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தற்போது தங்களது திட்டத்தை நிறைவேற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை அதிகமாகவே பயன்படுத்துகின்றன. இப்போது "ஊழல் ஊழல்' என்று கோஷமிடும் பாரதிய ஜனதா தமது ஆட்சிக் காலத்தில் ஊழலை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு அப்படி அல்ல.

ஊழலை ஒழிக்கவும், தகவல் உரிமை சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்றுள்ளார்.

திக்விஜய் சிங்கின் இந்தக் குற்றச்சாட்டு பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக... இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், யாரெல்லாம் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ,போராடுகிறார்களோ அவர்கள் மீது குற்றம்சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் திக்விஜய் சிங். அவரது இந்தச் செயலால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. காங்கிரஸ்தான் நம்பகத்தன்மையை மேலும் மேலும் இழக்கும் என்றார்.

பதில்கூற முடியாது... திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய ஜனநாயக நாட்டில் ஒவ்வொருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும் உரிமையும், சுதந்திரமும் உள்ளது. இதனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது என்றார்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment