Thursday, November 3, 2011

எவனோ குண்டு வைத்தார்களாம்! இவர்கள் அதை எடுத்தார்களாம்....!

நாட்டில் ஊழல் பெருகி விட்டது என்றும் ஊழலைத் தடுத்து நிறுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன் என்று இந்தியா முழுக்க மற்றொரு ரத யாத்திரையைக் கிளப்பி கிரிவலம் கிளம்பிய பாஜக மூத்த தலைவர் அத்வானிக்குச் சோதனை, பாஜக ஆளும் மாநிலத்திலேயே இருந்தது தான் வேதனை. அத்வானி ரதத்தைக் கிளப்பிய போதே, "சொந்த கட்சி ஆளும் மாநிலத்திலேயே முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் எனப் பெரும் பட்டாளமே ஊழல் வழக்குகளில் சிறையில் அடைபட்டுக் கிடக்க அத்வானி யாருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்" என்று எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் கொந்தளித்தன. இவர்களின் கொந்தளிப்பும் ஒரு வகையில் நியாயம் தானே?. வீட்டில் இருக்கும் தேளை விட்டு விட்டு வெளியில் இருக்கும் பாம்பை அடிக்கச் செல்லும் அத்வானியை வேறு என்னவென்பது?

அதே போன்று தமிழ்நாட்டிலும் பரபரப்பாக பேசப் பட்ட ஒரு செய்தி. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி வருவது. இருவருக்குமே கண்டம் பெங்களூருவில்!.

தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரு செய்திகளையும் வேறு ஒரு பரபரப்புச் செய்தி மறக்கடித்து விடும். இது நாம் நடைமுறையில் கண்டு வரும் எதார்த்தம். அதன் அடிப்படியில் நிறைவேற்றப் பட்டு இருக்கும் திட்டமாகக் கூட இருக்கலாம் அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் எடுக்கப் பட்டுள்ள பைப் குண்டு!.

இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாமல் இல்லை!

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முந்தைய திமுக தலைமையிலான ஆட்சியிலும் தமிழகத்தில் தென்காசி, கோவை போன்ற இடங்களில் சில "குண்டு" சம்பவங்கள் நடந்தன.

இப்போது இரு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டது போலவே அப்போதும் ஆரம்பத்தில் முஸ்லிம்களே துரத்தி வேட்டையாடப்பட்டனர். ஆனால், தொடர் விசாரணைகளில் அந்தக் குண்டுகளின் பின்னணியில் சங்பரிவாரமும் காவல்துறையிலுள்ள சில கறுப்பு ஆடுகளுமே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குண்டு சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் உடனடியாகவோ அல்லது சற்று தாமதித்தேனும் அவற்றின் பின்னணியில் சங்பரிவார அமைப்புகள் ஈடுபட்டுள்ளதும் மாலேகான், ஹைதராபாத், கோவா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் என பல வெடிகுண்டு சம்பவங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தற்போது அத்வானியின் தமிழக வருகையின்போது நடந்துள்ள இந்தச் சம்பவத்தையும் சந்தேகத்துடனே காணவேண்டியுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில் அடிப்படையிலேயே காவிச் சிந்தனை கரைபுரண்டோடும் ஜெயல‌லிதா ஆளும் மாநிலத்தில் எளிதாக உளவுத் துறையின் உதவியுடன் குண்டுகளை வைத்து எடுக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு இருப்பதற்கும் சாத்தியங்கள் அதிகம்!

அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழியில் உள்ள ஆலம்பட்டி கிராமம் அருகே அந்தப் பைப் குண்டைக் கண்டுபிடித்தவர்கள், அத்வானியின் பயணப்பாதை பாதுகாப்பு பொறுப்புள்ள மத்திய, மாநில அரசைச் சார்ந்த உளவுப் பிரிவோ காவல்துறையோ அல்ல. தமிழகத்தில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்!. காலைக்கடன் கழிக்கச் செல்லும்போது பாலத்தில் வயர் இருப்பதைக் கண்டு சந்தேகத்தில் அவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததில், குண்டு கண்டறியப்பட்டதாம்!.

உடனடியாக குண்டு கண்டுப் பிடிக்கப் பட்ட செய்தியை, அது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட முறையில் எழும் சந்தேகங்களைக் குறித்த எவ்வித கேள்விகளையும் எழுப்பாமல் ஊடகங்கள் பரபரப்பாக்கின. சாதாரணமாக இவ்வாறு குண்டுகள் என்று வரும்போது பாஜக எழுப்பும் கூக்குரல்களோ, ஆரவாரமோ, பெரிய அளவிலான எந்த எதிர்ப்பையோ இம்முறை காணமுடியவில்லை. எப்போதும் போல், பின்னர் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது என்று அடக்கிவாசிக்கிறார்களோ!

ஊழல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த அத்வானியோ, தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி பெங்களூரு நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து, ரத யாத்திரையின் தமிழக வருகையின்போது வாயைத் திறக்கவில்லை. மாறாக குண்டைக் கண்டுபிடித்து(?) திறம்பட ஆட்சி புரிந்து வரும் ஜெயலலிதாவுக்குத் தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.

குண்டு குறித்து துப்புக் கொடுத்த அதிமுக தொண்டர்கள் இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டி தலா ரூ 50000 பரிசும் வழங்கி இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பாஜகவோ ரூ 1 லட்சம் வழங்கி கௌரவிக்க உள்ளதாம். சாதாரணமாக இதுபோன்ற முக்கிய வழக்குகளில் முதல் சாட்சியாக வருபவர்களே ஆரம்பத்தில் நன்றாக விசாரிக்கப்படுவர். இந்த அதிமுக விசுவாசிகள் சரியான முறையில் விசாரிக்கப் பட்டார்களா என்று தெரிய வில்லை.

மொத்தத்தில், ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் என்று புறப்பட்ட அத்வானியின் பயணப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டும் அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் அதற்கு வழங்கிய முக்கியத்துவத்தின்மூலம், தமிழகத்தில் ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற படியேறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வாயே திறக்காமல் அத்வானி சாமர்த்தியமாக தமிழக எல்லை கடந்து கேரளா  சென்றாகிவிட்டது. அம்மாவுக்கும் பாஜக மீதான தன்னுடைய சாஃப்ட் கார்னரை வெளிப்படுத்தியது போலும் ஆயிற்று! விளைச்சல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணில் வெளிப்படக்கூடும்!

எது எப்படியானாலும் நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் பேச்சாகியுள்ள இந்த வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியிலுள்ள உண்மைகள் விரைவில் வெளி வர வேண்டும் என்பதே அப்பாவிப் பொது மக்களின் விருப்பம்.

2 comments:

  1. அன்பு நண்பர் அத்வானிக்கு பரிசாக, பொருளாக கொடுக்காமல் சம்பவமாக கொடுக்கப்பட்டுள்ளதோ? மோடியின் பெயர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் நிலையில் அத்வானியின் பெயரை தூக்கி நிறுத்த இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. துவேச ஆட்சியில் வழக்கம் போல கைது படலமும் ஒரு திசையை மட்டும் குறி வைத்து நடத்தப்படுகிறது..

    ReplyDelete
  2. ஆமாம் நண்பர் அவர்களே. இந்துத்துவ தன்னுடைய இருப்பை காட்டிகொள்ள போட்ட நாடகம் தான் இது.

    ReplyDelete