Sunday, November 27, 2011

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு: பாராளுமன்றம் ஸ்தம்பித்தது

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்கட்சியினருடன் இணைந்து நடத்திய எதிர்ப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்தன. தொடர்ச்சியாக நான்காவது தினமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடக்காமல் முடக்கப்பட்டன.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையிலும், மக்களவையிலும் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிக்கை சமர்ப்பித்தார்.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதேபோன்று, மக்களவையிலும் அரசின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையில் திரிணமூல் எம்.பி.க்களுடன் இணைந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது மக்களவைத் தலைவர் இருக்கையில் இருந்த தம்பிதுரை, சபை நடவடிக்கைகளை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மாநிலங்களவையில் ஆனந்த் சர்மாவின் அறிக்கையை மார்க்சிஸ்ட், பாஜக எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர். திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியதை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக முன்னதாக எதிர்க்கட்சிகளுடன் அரசு கலந்தாலோசிக்காதது ஏன்? என்று சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் கேள்வி எழுப்பினார். 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதீப் பந்தோபாத்யாய செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். எனினும், இதன் மூலம் கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது” என்றார்.

No comments:

Post a Comment