கெய்ரோ: ஃபலஸ்தீனில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்துவதற்கு ஹமாஸ்-ஃபதஹ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஃபலஸ்தீன் ஆணைய அதிபரும், ஃபத்ஹ் கட்சியின் தலைவருமான மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் கெய்ரோவில் நடத்திய பேச்சு வார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஃபலஸ்தீனில் இரு கட்சியினரும் இணைந்து அரசை உருவாக்குவதற்கு தீர்மானம் ஏற்பட்டுள்ளதாக மூத்த ஃபத்ஹ் கட்சி தலைவர் அறிவித்துள்ளார். மேலும் இரு கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரு கட்சிகளை சார்ந்த சிறைக் கைதிகளை விடுவிக்கவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும் இரு தரப்பினரும் சமமான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே ஹமாஸும், ஃபத்ஹும் ஒப்பந்த மேற்கொண்டதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தமாட்டோம் என காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார்.
ஹமாஸும், ஃபத்ஹும் ஒப்பந்தம் மேற்கொள்வதை எதிர்ப்பதன் பொருள் ஃபலஸ்தீனிகள் ஒன்றிணைவதற்கான முக்கியத்துவத்தை நிரூபிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அப்பாஸும், மிஷ்அலும் மீண்டும் டிசம்பர் 22-ஆம் தேதி கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஃபலஸ்தீனில் அனைத்து அமைப்பினரும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளை குறித்து ஆராயப்படும் என இரு தலைவர்களும் கூறினர்
No comments:
Post a Comment